இலகு இலக்கை அடைய முடியாமல் லக்னோ அணி படுந்தோல்வி
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக கோலி, கேப்டன் டு பிளசிஸ் களமிறங்கினர்.
கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த அஞ்சு ராவத் 9 ரன்னில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் டு பிளசிஸ் அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் வந்த வீரர்கள் லக்னோ அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். தீபக் ஹூடா 1 ரன்னிலும், மார்கஸ் ஸ்டாய்னஸ் 13 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 9 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 23 ரன்னிலும், ரவி பிஷோனி 5 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
காயம் காரணமாக தொடக்க வீரராக களமிறங்காத கேப்டன் கேஎல் ராகுல் கடைசி விக்கெட்டிற்கு களமிறங்கினார். கடைசி ஓவரில் லக்னோ வெற்றிபெற 23 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், கடைசி ஓவரை ஹர்சல் பட்டேல் சிறப்பாக வீசினார். இதனால் லக்னோ அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
பெங்களூரு அணியின் ஹெசல்வுட், கரண் சர்மா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றீயின் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.