காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர நல்ல வாய்ப்பு ; ஆண்டனி பிளிங்கன்
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க மேற்கொண்டிருக்கும் ஆக அண்மைய முயற்சி நல்லதொகு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்துக்கு இதுவே ஆகச் சிறப்பான வாய்ப்பாக இருப்பதுடன், கடை.சி வாய்ப்பாகவும் அமையக்கூடும் என்றார் அவர்.மேலும், ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பிணைக்கைதிகளை விடுவிக்க இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று இஸ்ரேலிய அதிபர் ஐசேக் ஹெர்சோக்குடனான சந்திப்புக்கு முன்னதாக அமைச்சர் பிளிங்கன் செய்தியாளர்களிடம் இவற்றைத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 20ஆம் திகதியன்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை அமைச்சர் பிளிங்கன் சந்தித்துப் பேச இருக்கிறார்.அப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து பிரதமர் நெட்டன்யாகுவிடம் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அமைச்சர் பிளிங்கன் அழைப்பு விடுத்தார்.போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உதவி வரும் நாடுகள் இந்த வாரத்துக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை உறுதி செய்ய அமெரிக்கா அரசதந்திர அடிப்படையிலான அழுத்தத்தைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் அமைதியாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றும் அமைச்சர் பிளிங்கன் தெரிவித்தார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான நேரம் கனிந்துவிட்டதாகவும் இனி அதைத் தள்ளிப் போடும் நோக்கில் சாக்குப் போக்கு கூறக்கூடாது என்றும் பிளிங்கன் கூறினார்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் உதவி வருகின்றன.போரை முடிவுக்கு கொண்டு வர இதுவரை எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த வாரம் மீண்டும் தொடங்கியதை அடுத்து, போர் நிறுத்த உடன்படிக்கை விரைவில் கையெழுத்திடப்படும் என்று அமெரிக்கா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.ஆனால் பேச்சுவார்த்தைகள் தீர்வை நோக்கிச் செல்வதாகக் கூறுவது வெறும் மாயை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
போர் முடிவுக்கு வர வேண்டுமாயின் காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று அது அடித்துக் கூறுகிறது.