இஸ்ரேல் ஆதரவாளர்கள்மீது தாக்குதல்: அமெரிக்காவில் ஜோர்தான் நாட்டவர்மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் வசிக்கும் ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த 43 வயது ஹாஷேம் யூனிஸ் ஹாஷேம் ஹ்னைஹென், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
அவர்மீது ‘வெடிபொருள்களைப் பயன்படுத்துவேன்’ என அச்சுறுத்தியதாகவும் ஒரு வர்த்தக நிறுவனத்தின் எரிசக்தி வசதியை அழித்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாக அது தெரிவித்தது.
கடந்த ஜூன் மாதம் முதல் ஹ்னைஹென், ஒர்லேண்டோவில் உள்ள இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க நீதித்துறை கூறியது.
இரவு நேரங்களில் முகமூடி அணிந்துகொண்டு வர்த்தக நிறுவனங்களின் கண்ணாடிக் கதவுகளை உடைத்து எச்சரிக்கை கடிதங்களை வீசிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட $700,000க்கும் அதிகமான பெறுமானமுள்ள பொருள்களை அவர் சேதப்படுத்தியதாக நம்பப்படுவதாகவும் அவர் ஜூலை 11ஆம் திகதி கைதி செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு நீதித் துறை தெரிவித்தது.