2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் போட்டியில் இந்தியா
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுடெல்லி செங்கோட்டையில் இன்று (15) நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதுதான் இந்தியாவின் கனவு, அதற்கு தயாராகி வருகிறோம் என்று மோடி கூறினார்.
பெரிய அளவிலான உலகளாவிய நிகழ்வுகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தும் பட்சத்தில், போட்டியை நடத்தும் நகரமாக அகமதாபாத் பெயரிடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்தியப் பிரதமரின் அரசியலின் அதிகார மையமாகக் கருதப்படும் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் அகமதாபாத் ஆகும்.
இந்தியா அதன் வரலாற்றில் இதற்கு முன் ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்தியதில்லை.
கடைசியாக 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பல விளையாட்டு போட்டிகளை நடத்தியது.
மேலும் இந்தியா 42 வருடங்களில் (1982ல்) ஆசிய விளையாட்டுப் போட்டியை கூட நடத்தவில்லை.
இருப்பினும், இந்தியாவைத் தவிர, சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் 2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கு போட்டியிட உள்ளன.
அதன்படி, அடுத்த ஆண்டு பொதுச்சபைக்கு பிறகு போட்டி நடத்தும் நாட்டை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) அறிவிக்கும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிக அற்புதமான விளையாட்டு விழா என அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டியை இந்த ஆண்டு பிரான்ஸ் நடத்தியது,
வரும் 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
மேலும், 2032 ஒலிம்பிக் போட்டிகளை அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நடத்தவுள்ளது.