இலங்கையில் தேடப்படும் பிரபல தாதா பிரான்சில் கைது – பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கை
பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் குடு அஞ்சு தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர் குறித்து ஏற்கனவே சட்டமா அதிபரிடம் கேட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபராக கருதப்படும் குடு அஞ்சு கடந்த புதன்கிழமை பிரான்சில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“இந்த கைது தொடர்பில் சர்வதேச பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். பிரான்ஸ் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தற்போதுள்ள ஒப்பந்தம் தொடர்பாக குறிப்பாக குற்றவாளிகளை கையாள்வதில் சில விதிகள் உள்ளன.
அத்தகைய சட்டங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், பிராந்திய அமைப்புகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பிரான்ஸுக்கு இடையே அத்தகைய ஒப்பந்தங்கள் உள்ளதா? இல்லை? அவ்வாறான நிலையில், சட்டமா அதிபர் திணைக்களமும், சம்பந்தப்பட்ட அமைச்சும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஒருங்கிணைக்க வேண்டும்” என்றார்.