இலங்கையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் – ஜனாதிபதி
புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட அதிரடிப்படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம்,வன்முறை,வன்முறையை ஏற்படுத்தும் வகையிலான எதிர்ப்பு நடவடிக்கைகள், உட்பட பல்வேறு அவசரநிலைகளைக் கையாளும் பொறுப்பு இந்தப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்புக்காக தற்போதுள்ள அனைத்து காவல்துறை, இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்களை ஒன்றிணைத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தனியொரு நிறுவனத்தை உருவாக்கி, அதற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும்.
பாதாள உலகக் குழுக்களுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது.
பாதாள உலகக் குழு செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.
அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கு உறுதிப்படுத்தப்பட்ட நாடொன்றில் மக்களை வாழ அனுமதிப்பது அந்த மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
அதனைச் சட்டத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.