பொருளாதார வீழ்ச்சி காரணமாக நியூசிலாந்தை விட்டு வெளியேறும் வரலாறு காணாத அளவு மக்கள்
வேலையில்லா திண்டாட்டம், வட்டி விகித உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் வரலாறு காணாத எண்ணிக்கையில் மக்கள் நியூசிலாந்தை விட்டு வெளியேறுகின்றனர் என்று அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இவ்வாண்டு ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டில் கிட்டத்தட்ட 131,200 பேர் நியூசிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறினர் என்றும் வெளியேறியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர் என்றும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13 ஆம் திகதி) அந்நாடு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்துக்குக் குடியேறுபவர்களை விட அந்நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது என்றும் இதற்கு அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது என்றும் அந்நாட்டுப் பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நியூசிலாந்தைவிட்டு வெளியேறியவர்களில் 80,174 பேர் அந்நாட்டுக் குடிமக்கள் எனவும் இந்த எண்ணிக்கை கொவிட்-19 கொள்ளைநோய் காலத்திற்கு முன்பு இருந்த எண்ணிக்கையைவிட இருமடங்கு எனவும் அந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தை நியூசிலாந்து அரசாங்கம் திறம்படக் கையாண்டதால், அந்நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசித்தவர்கள் அதிகளவு மீண்டும் நாட்டுக்குத் திரும்பினர்.
இருப்பினும், வாழ்க்கைச் செலவீனம், வட்டி விகிதம் அதிகரிப்பு, குறைவான வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால் விரக்தியடைந்த நியூசிலாந்து நாட்டவர்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த பிற நாடுகளை நோக்கிச் செல்வதாகப் பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் நியூசிலாந்தின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இவ்வாண்டின் முதல் காலாண்டில் அந்நாட்டின் பொருளியல் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டது. இரண்டாவது காலாண்டின் வேலையின்மை 4.7 சதவீதமாக உயர்ந்தது. அதே காலாண்டின் பணவீக்கம் 3.3 சதவீதமாக உயர்ந்தது.