அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம் : நரிட்டா விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டது
அமெரிக்காவைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்றில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அது ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, நரிட்டா விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று மூடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பானிய நேரப்படி ஆகஸ்ட் 13ஆம் திகதி அதிகாலை 1.10 மணி அளவில் இயந்திரக் கோளாறு வெளிச்சத்துக்கு வந்ததும் அது நரிட்டாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டதாக ஜப்பானின் போக்குவரத்து அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
அந்த அட்லஸ் ஏர் போயிங் 747 சரக்கு விமானம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தின் விமானிகளும் ஊழியர்களும் (மொத்தம் ஏழு பேர்) காயம் இன்றி தப்பியதாகவும் விமானத்தின் டயர்களும் சக்கரங்களும் சேதமடைந்திருந்ததாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு கூறியது.
இந்த விவகாரம் காரணமாக ஓடுபாதை குறைந்தது ஏழு மணி நேரத்துக்கு மூடப்பட்டதாகவும் விமானத்தின் டயர்கள் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஓடுபாதை ஜப்பானிய நேரப்படி காலை 8.30 மணிக்கு வழக்க நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு கூறியது.
ஓடுபாதை மூடப்பட்டபோதிலும் மற்ற விமானச் சேவைகள் அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு பற்றி கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.