விமானந்தாங்கிப் போர்க் கப்பல்களை விரைவில் மத்திய கிழக்கு கொண்டுசெல்ல பென்டகன் தலைவர் உத்தரவு
அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், விமானந்தாங்கிப் போர்க்கப்பல் குழுவை விரைவில் மத்திய கிழக்கு வட்டாரத்திற்குக் கொண்டுசெல்ல உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சு, ஆகஸ்ட் 11ஆம் திகதி இத்தகவலை வெளியிட்டது.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் போர் மூளக்கூடும் என்ற அச்சம் நிலவும் வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலின் தலைமையிலான விமானந்தாங்கிப் போர்க் கப்பல்கள் எஃப்-35 ரகப் போர் விமானங்களை ஏந்திச் செல்கின்றன.
யுஎஸ்எஸ் ஜார்ஜியா எனும் ஏவுகணை பாய்ச்சக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலையும் மத்திய கிழக்குக்குக் கொண்டுசெல்ல ஆஸ்டின் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.
நாசகாரிகள் உள்ளிட்ட போர்க்கப்பல் குழுவை மத்திய கிழக்குக்கு அனுப்புவதாக அமெரிக்கா சென்ற வாரம் அறிவித்தது.இதற்கிடையே, பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க வேண்டியதன் அவசியம், சண்டை நிறுத்தம் எட்டப்படுவது தொடர்பான முன்னேற்றம், காஸாவில் உள்ள பிணையாளிகளை விடுவித்தல் போன்றவை குறித்து ஆகஸ்ட் 11ஆம் திகதி, அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேலியத் பாதுகாப்பு அமைச்சரிடம் கலந்துபேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ர் இருவரும் ஜூலை மாதம் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாக ஈரானும் ஹிஸ்புல்லா அமைப்பும் சூளுரைத்துள்ள வேளையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ஆஸ்டினின் உத்தரவு, நட்பு நாடான இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவைக் காட்டும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.