இலங்கையர்களை ஏமாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அபுல்கான் கைது
தமிழகத்தில் உள்ள இலங்கையர்களை இலக்கு வைத்து மனித கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவரை இந்திய புலனாய்வு முகமை கைது செய்துள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனி அபுல் கான் என்ற சந்தேக நபரை கைது செய்வதற்காக இந்திய பொலிஸார் சுமார் மூன்று வருடங்களாக விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இசான் என்ற நபருடன் இணைந்து சந்தேகநபர் இந்த மனித கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கையர்களை கடல் வழியாக தமிழகத்துக்கு அழைத்து வந்து அங்கு பல்வேறு இடங்களில் சிறைவைத்துள்ளனர்.
இந்த ஆட்கடத்தலுக்கு சுமார் 38 இலங்கையர்கள் பலியாகி உள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்களை விடுவிக்க தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட பல சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 3 வருடங்களாக தலைமறைவாக இருந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான அபுல் கான் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.