பங்களாதேஷில் இந்து-விரோத தாக்குதலுக்கு தீர்வு: அமெரிக்கா தலையிட 2 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் வலியுறுத்தல்
பல்களாதேஷில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த 5ம் திகதி கவிழ்ந்த பிறகு சிறுபான்மையின இந்துக்கள் மீது 52 மாவட்டங்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக இரு இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வன்முறையில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான இந்துக்கள் அண்டை நாடான இந்தியாவுக்குள் நுழைய முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுக்கு மிச்சிகன் எம்.பி. ஸ்ரீதானேதர் எழுதியுள்ள கடிதத்தில், “வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக நான் மட்டுமல்ல சர்வதேச சமூகத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல்களாதேஷில் இடைக்கால பிரதமராக முகம்மது யூனுஸ் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாட்டில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர புதிய அரசுக்கு உதவிசெய்ய வேண்டிய கடமை அமெரிக்க அரசுக்கு உள்ளது.
பல்களாதேஷில் துன்புறுத்தப்பட்ட இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு அகதிகள் என்ற தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை பைடன் நிர்வாகம் வழங்க வேண்டும்.
பல்களாதேஷில் இது ஒரு சிக்கலான தருணம். வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசுக்கு இயன்ற அனைத்து உதவிகளும் நாம் அளிக்க வேண்டும். இவ்வாறு எம்.பி. ஸ்ரீதானேதர் கூறியுள்ளார்.
இதுபோல் வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுக்கு எம்.பி.ராஜா கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள கடிதத்தில், “வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றுள்ள நிலையில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அவரது அரசுடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவது மிகவும் அவசரமாகும்.
பல்களாதேஷில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இந்துக்களுக்கு எதிரான வன்முறையாக மாறுவது இது முதல்முறை அல்ல.
வங்கதேச இடைக்கால அரசுடன் பிளிங்கன் நேரடியாக பேச வேண்டும். வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அமெரிக்கா தனது செல்வாக்கை செலுத்த வேண்டும். இவ்வாறு ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறியுள்ளார்.