மீண்டும் புதிய தலைவரைத் தேடும் தலைவலியை ஹமாசுக்கு தருவோம் ; இஸ்ரேல் சூளுரை
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வாரைத் தீர்த்துக் கட்டப்போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலுக்குத் சின்வார்தான் மூளையாகச் செயல்பட்டார் என்று நம்பப்படுகிறது.அந்தத் தாக்குதலுக்குப் பிறகு காஸா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது.கடந்த 11 மாதங்களாக தலைவிரித்தாடும் போரின் காரணமாக இதுவரை 39,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டதாக ஹமாஸ் தெரிவித்தது.
சின்வாருக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே, அண்மையில் ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.அதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹமாஸ் கூறுகிறது.ஹனியேவின் மரணத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தன்மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கிறது.அதை எதிர்கொள்ள அது தயாராகி வருகிறது.
இதற்கிடையே, ஆகஸ்ட் 7ஆம் திகதியன்று இஸ்ரேலிய ராணுவ முகாம் ஒன்றில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, நாட்டைத் தற்தாக்க இஸ்ரேலியப் படைகள் மிகுந்த முனைப்புடன் இருப்பதாகக் கூறினார்.“இஸ்ரேலைத் தற்காக்கவும் எதிரிப் படைகள் மீது தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்கிறோம்,” என்று இஸ்ரேலிய ராணுவத்தில் புதிதாகச் சேர்ந்தவர்களிடம் அவர் தெரிவித்தார்.
சின்வாரைத் தேடிக் கண்டுபிடித்துத் தீர்த்துக் கட்டி, மீண்டும் புதிய தலைவரைத் தேடும் தலைவலியை ஹமாசுக்குத் தரப்போவதாக இஸ்ரேலிய ராணுவத் தலைவர் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறினார்.
ஹமாஸ் அமைப்பின் காஸா நகர்த் தலைவராக 2017ஆம் ஆண்டிலிருந்து சின்வார் பொறுப்பு வகித்து வருகிறார். அக்டோர் 7ஆம் திகதி தாக்குதலுக்குப் பிறகு அவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை யாரும் பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சின்வாரைப் புதிய தலைவராக நியமித்ததன் மூலம், போராட்டப் பாதையிலிருந்து ஹமாஸ் விலகப்போவதில்லை என்று உலக நாடுகளுக்குப் புரியவைத்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சின்வாருக்கு ஹிஸ்புல்லா அமைப்பு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது.ஹமாஸ் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோரை இஸ்ரேல் கொன்றும் அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்பதை இது காட்டுவதாக அது கூறியது.