பங்களாதேஷில் அவாமி லீக் கட்சி தலைவர்கள், குடும்பத்தினர் என 29 உடல்களை மீட்ட அதிகாரிகள்!!
ஷேக் ஹசீனாவிற்கு எதிராக வங்கதேசத்தில் நிலவிய கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன் உச்சக்கட்டத்தை எட்டியது. போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகர் தாகாவை நோக்கி குவிய அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பிரச்னை தீவிரமடைந்தது.
இந்நிலையில்தான் ராணுவத்தின் வலியுறுத்தலுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை உதறிய ஷேக் ஹசீனா, தாக்காவிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தார். இந்திய வான்பரப்பில் ஷேக் ஹசீனாவின் விமானம் நுழைந்தவுடன் அந்த விமானத்திற்கு இந்தியாவின் 2 ரஃபேல் விமானங்கள் பாதுகாப்பு அளித்தவாறே பறந்துவந்தன.
இந்நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்ற பிறகும், வங்கதேசத்தில் கலவரம் குறையாமல் தொடர்ந்து வருகிறது.
வங்கதேச வன்முறைக்கு இதுவரை 440 பேர் பலியாகியிருக்கிறார்கள் . வங்கதேச அதிபர் முதகமு நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, நோபல் பரிசு பெற்ற 84 வயது யூனுஸ் அடுத்த இடைக்கால அரசுக்கு தலைவராக இருப்பார் என அறிவித்திருந்தார்.
அந்நாட்டில் சிறுபான்மையிருக்கு எதிரான வன்முறைகள் பரவலாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நூற்றுக்கணக்கான இந்து வீடுகள் மற்றும் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாக பங்களாதேஷின் இந்து சங்கம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கட்த இரண்டு நாட்களில் மட்டும், அவாமி லீக் கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என இதுவரை 29 உடல்களை வங்கதேச அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.