பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 30 பேர் மரணம்!
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம் காரணமாக இந்த வாரம் மட்டும் அங்கு குறைந்தது 30 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகூரில் நாற்பது ஆண்டுகள் இல்லாத அளவு மழை பெய்ததாக கூறப்படுகிறது.
தெற்கு ஆசியா முழுவதும் பருவமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் பரவலாக இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவில் குறைந்தது 195 பேர் இறந்ததுடன் மேலும் கிட்டத்தட்ட 200 பேர் காணாமல் போய் விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனமழை தீவிரமாகப் பொழியும் வடக்கு பாகிஸ்தானில் வெள்ளம், கட்டடங்கள் இடிந்து விழுவது போன்றவற்றால் மின்சாரம் தாக்கி இறப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
“நாற்பத்து நான்கு ஆண்டு பெய்த மழை அளவு லாகூரில் மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது,” என்று வடக்கு பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறினர். அங்கு மரண எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது என்று கூறும் அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதியில் இவ்வாரம் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுமென தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதியில் இருபதுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில் அதில் 12 பேர் சிறுவர்கள் என அந்நாட்டு பேரிடர் நிர்வாக அமைப்பின் பேச்சாளரான அன்வர் ஷெஸாட் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் விளக்கினார்.