வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ராக்கெட்கள் மூலம் ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் திடீரென சில நாட்களுக்கு முன் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில், குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பரல் காயமடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டனர்.
அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த சூழலில்,லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. 20-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியது.
எனினும், ராக்கெட்டுகளில் 5 மட்டுமே இஸ்ரேலுக்குள் புகுந்தன. யாருக்கும் பாதிப்பு ஏற்பட்ட தகவல்கள் இல்லை என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹிஜ்புல்லா அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடருகிறது.