பங்களாதேஷ்: குழுத் தலைவர்களை விடுவிக்காவிட்டால் மீண்டும் போராடுவோம் – மாணவர்கள் சூளுரை
பங்ளாதேஷில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களது குழுத் தலைவர்களை விடுவிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று ஜூலை 28ஆம் திகதி சூளுரைத்துள்ளனர்.
போராட்டங்களால் சென்ற வாரம் மூண்ட வன்முறையில் கிட்டத்தட்ட 205 பேர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை, மருத்துவமனைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி சந்தித்த ஆகப் பெரிய கிளர்ச்சிகளில் ஒன்றாக இந்தப் போராட்டம் கருதப்படுகிறது.
நாட்டில் ஒரு வாரத்துக்குமேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ராணுவத்தினர் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களில் சிலர் மாணவர் குழுத் தலைவர்கள்.
பங்ளாதேஷில் அரசாங்க வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மாணவர் குழுத் தலைவர் நஹித் இஸ்லாமும் மற்றவர்களும் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டால் போராட்டம் கைவிடப்படும் என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் மரணத்துக்குக் காரணமான அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அவ்வாறு செய்யாவிட்டால், ஜூலை 29ஆம் திகதி முதல் கடுமையான போராட்டங்களைத் தொடங்க நேரிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜூலை 26ஆம் திகதி, நஹித் இஸ்லாம் உள்ளிட்ட மூவரைச் சீருடை அணியாத உளவாளிகள் வலுக்கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வேறு இடத்துக்குக் கொண்டுசென்றனர்.
தடுப்புக் காவலின்போது ஏற்பட்ட காயங்களுக்காகத் தாம் சிகிச்சை பெறுவதாக ஏஎஃப்பி நிறுவனத்திடம் கூறிய நஹித் இஸ்லாம் தமது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்று அஞ்சுவதாகக் கூறியிருந்தார்.