டொனால்ட் ட்ரம்ப் vs கமலா ஹாரிஸ் ; அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார கள நிலவரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை ‘முட்டாள், அவர் ஓர் இடதுசாரி பைத்தியம்’ என மலிவாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, ‘கமலா ஹாரிஸ் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்காக செயல்படுபவர்’ என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில், கமலா ஹாரிஸ் தனது பிரச்சார உரையை மிகத் தெளிவுடன் அணுகி வருகிறார்.
கடந்த 21-ம் திகதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அந்த தருணம் முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரேஸில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருந்தது. அவருக்கு அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸை இனவெறியர் எனவும், பாலியல் ரீதியாக இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியும் அவரை விமர்சித்து வருகின்றனர். துணை அதிபராக பணியாற்றிவரும் கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நாட்களிலிருந்து, அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
ட்ரம்பின் ஆதரவாளர்கள் கமலா ஹாரிஸை இவ்வாறு விமர்சிப்பது, அமெரிக்க மக்கள் தொகையில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டிருக்கும் கருப்பின மக்களின் வாக்குகளை ஈர்ப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் எனவும், நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் இது எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியின் சட்டமியற்றும் குழுவில் இடம்பெற்றுள்ள சிலரிடம் நேர்காணல் எடுக்கப்பட்டது. அதில் அவர்கள், “கமலா ஹாரிஸ் குறித்த இது மாதிரியான கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டும். தனிப்பட்ட தாக்குதல், அவமரியாதையான பேச்சுக்கள் முதலானவை குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும்” என கவலை தெரிவித்தனர்.
வட கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், “கடந்த மூன்றரை ஆண்டுகளாக, பைடன் ஏற்படுத்திய பேரழிவின் பின்னணியில் உந்து சக்தியாக கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார். அவர் ஓர் இடதுசாரி பைத்தியம். அவர் அதிபரானால் நாட்டை அழித்துவிடுவார். அதனை நாங்கள் நடக்கவிட மாட்டோம். கொடூரமான அதிபரால் நியமிக்கப்பட்டவர் கமலா ஹாரிஸ். ஜோ பைடன் அதிபராகி மூன்றரை ஆண்டுகளில் இந்த நாட்டுக்காக என்ன செய்தார்? நினைத்துப் பார்க்க முடியாத பலவற்றை அவர் செய்துள்ளார். அவற்றையெல்லாம் நாங்கள் மாற்றப் போகிறோம். ஜோ பைடனின் மனநிலை குறித்து கமலா ஹாரிஸ் துணிச்சலான பொய்களை கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸை எப்போதும் நம்ப முடியாது. பைடனைப் போலவே அவரும் தலைமை தாங்க தகுதியற்றவர். இவர் முற்றிலும் யூத மக்களுக்கு எதிரானவர். ஒரே ஆண்டில் இந்த நாட்டை அழித்துவிடுவார்” என்று சராமாரியாக பேசியிருந்தார் ட்ரம்ப்.
இதற்கிடையே, ட்ரம்பின் கூட்டாளியான ஜே.டி.வான்ஸின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2021-இல் வான்ஸ் அளித்த இந்த நேர்காணலில் கமலா ஹாரிஸ் பற்றிப் பேசும்போது, “தங்கள் சொந்த வாழ்க்கையில் பரிதாபமான நிலையில் இருக்கும் குழந்தை இல்லாத பெண்களின் கூட்டம் ” என இழிவாக விமர்சித்திருந்தார்.
கமலா ஹாரிஸ் தனது முதல் பிரச்சார உரையில், தேர்தலில் தான் வெற்றி பெற்றால் கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம், தொழிலாளர் நலச் சங்க நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு தீர்வு என பலவற்றில் கவனம் செலுத்தப்படும் அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சார்ந்து வாக்குறுதிகள் மற்றமுப் தெளிவானப் பேச்சு மூலம் கவனம் ஈர்த்தார்.
“டொனால்ட் ட்ரம்ப் நம் தேசத்தை பின்னோக்கி இழுத்துச் செல்வார். நாம் சுதந்திரமான, சட்டத்தை பின்பற்றும் தேசத்தில் வசிக்க வேண்டுமா அல்லது வெறுப்பும், பயமும், குழப்பமும் நிரம்பிய தேசத்தில் இருக்க வேண்டுமா?” என்று வினவியபோது கூட்டத்தில் இருப்பவர்கள் ‘கமலா, கமலா’ என ஆர்ப்பரிக்கச் செய்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.
மேடைப் பேச்சுக்கள், அரசியல் உரைகள் கமலாவுக்கு புதிது அல்ல என்றாலும்கூட, பெரும் எதிர்பார்ப்புக்கிடையே அவர் நிகழ்த்திய முதல் உரை, ட்ரம்புக்கு எதிரான ‘சிக்ஸர்’ விளாசல்களாகவே அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, கமலா ஹாரிஸ் மீது மலிவான தாக்குதல்களைத் தொடுக்கத் தொடங்கியுள்ளார் ட்ரம்ப்.
டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ் இடையேயான போட்டியால் சூடு பிடித்திருக்கிறது அமெரிக்க அரசியல் களம். “ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன். நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில், எங்கள் மக்கள் இயக்க பிரச்சாரம் வெற்றி பெறும்” என கமலா தெரிவித்திருக்கும் நிலையில், ட்ரம்ப் தரப்பின் மலிவான விமர்சனங்களையும் தாண்டி அதிபராக முடிசூடுவாரா என்பதை களம்தான் தீர்மானிக்கும்.