கண்டி நீதிமன்றத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியல்
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது வழக்கை ஒத்திவைக்கும் வகையில் கடந்த 2ஆம் திகதி சந்தேகநபர் தனது நண்பரின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி பொலிஸாருக்கு இந்த பொய்யான தகவலை வழங்கியுள்ளார்.
கினிகத்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், நண்பரின் சிம் கார்டைத் திருடி தனது கையடக்கத் தொலைபேசியில் செருகி உரிய அழைப்பை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தொலைபேசி எண்ணின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரை பிடித்து விசாரித்ததில் அவருக்கும் இதற்கும் நேரடி தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.
அதன் பிரகாரம் அழைப்பை மேற்கொள்ள பயன்படுத்திய தொலைபேசியின் உரிமையாளரை EMI இலக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அழைப்பு விடுத்த நபரும் தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொலைபேசியின் உரிமையாளர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.