சீனா, கனடா உத்தியோகப்பூர்வ பங்காளித்துவத்தை நோக்கிச் செயல்படவேண்டும்: வாங் யி
சீனாவும் கனடாவும் இருதரப்பு உறவுகளை வழக்கநிலைக்குக் கொண்டுவருவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் உத்திபூர்வ பங்காளித்துவத்தை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, கனடிய வெளியுறவு அமைச்சரிடம் கூறியிருக்கிறார்.
“சீன-கனடிய உறவுகள் கடந்த ஆண்டுகளாக சிரமங்களையும் சிக்கல்களையும் அனுபவித்துள்ளன. இவற்றை சீனா பார்க்க விரும்புவதில்லை,” என்று வாங், கனடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலியிடம் கூறியதாக, சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
வாங்கின் அழைப்பை ஏற்று, ஜோலி மூன்று நாள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.ஏழு ஆண்டுகளில் கனடிய வெளியுறவு அமைச்சர் ஒருவர் சீனா சென்றிருப்பது இதுவே முதல் முறை.
1970ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இருதரப்பு உறவுகள், 2018ஆம் ஆண்டில் ஹுவாவெய் தலைமை நிதி அதிகாரி மெங் வன்ஸொ கனடாவில் கைதானதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சீனா இரண்டு கனடியர்களை சீனாவில் கைதுசெய்தது.
அவர்கள் மூவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், கனடாவில் சீனா தலையிடுவதாக ஒட்டாவா குறைகூறிவந்ததால், இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சீன, கனடிய தலைவர்கள் 2022ஆம் ஆண்டில் இந்தோனீசியாவில் கடைசியாகச் சந்தித்தனர்.அப்போது தனியார் கூட்டம் ஒன்றின் தொடர்பில் தகவல்கள் கசியப்பட்டது குறித்து கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை சீன அதிபர் சி ஜின்பிங் குறைகூறினார்.
சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையே எந்தவொரு குறிப்பிட்ட முரன்பாடும் இல்லை என்று வாங், ஜோலியிடம் தெரிவித்தார்ர்.இருநாடுகளுக்கும், இருநாட்டு மக்களுக்கும் இருதரப்பு உறவைக் கட்டிக்காத்து மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.