பேராதனைக்கு நியமனம் பெற்றுச் செல்லும் வைத்தியர் அருச்சுனா
பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒரு வைத்தியருக்காக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது இதுவே முதல்முறை. எனக்காக போராடிய மக்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன்
யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன்.அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர்.
ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன். சுகாதார அமைச்சிற்கு வருமாறு நேற்றைய திகதியிட்டு இன்றைய தினம் எனக்கு கடிதம் கிடைத்துவிட்டது.
கொழும்பு சென்று நாளை அங்கு புதிய நியமனத்தைப் பெற்றுக்கொண்டு நான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என தெரிவித்தார்.