ஜப்பானில் மிக காரமான உருளைக்கிழங்கு வறுவல் உண்ட 14 மாணவர்கள் மருத்துவமனையில்..
“மிக காரமான” உருளைக்கிழங்கு வறுவலை உண்ட 14 ஜப்பானிய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தோக்கியோ உயர்நிலைப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவேளையின்போது அந்த வறுவலை சாப்பிட்டனர். சிலர் குமட்டல், வாயைச் சுற்றிக் கடுமையான வலியால் அவதிப்பட்டனர்.
அவர்களில் 14 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர். பாதிப்பு மோசமாக இருந்த ஒரு மாணவரை, சக்கர நாற்காலியில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது என்று பூஜி டிவி தெரிவித்தது.
மாணவர் ஒருவர் வேடிக்கையாக அந்த வறுவலைப் பள்ளிக்குச் எடுத்துச் சென்றுள்ளார். அவர் அதை முன்னரே சாப்பிட்டுள்ளார். அது அதிக காரமானதாக இருந்தது என்று செய்தி குறிப்பிட்டது.
“ஆர் 18+ கறி வறுவல்” என்ற அந்த வறுவல், 18 வயதிற்குட்பட்டவர்களுக்குத் தடைசெய்யப்பட்ட உணவுப்பொருள் என்று தயாரிப்பு நிறுவனத்தின் இணையப்பக்கம் குறிப்பிட்டுள்ளது. “மிகவும் காரமானது, வலியை ஏற்படுத்தும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“கோஸ்ட் பெப்பர்” என்று அழைக்கப்படும் மிகவும் காரமான மிளகு, அதிக அளவு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது என்று நிறுவனம் அதன் இணையத்தளத்தில் கூறுகிறது.
உயர் ரத்த அழுத்தம், பலவீனமான வயிறு உள்ளவர்கள் இதைச் சாப்பிடுவது “முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது”, மேலும் “கூச்ச சுபாவமுள்ளவர்கள், தைரியம் இல்லாதவர்கள்” அதை உண்ண ஊக்கமளிக்கப்படாது என்று இணையப்பக்கம் எச்சரிக்கிறது.