பியுமி ஹன்சமாலியை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை கைது செய்ய முடியாது
பணமோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மொடல் அழகி பியுமி ஹன்சமாலியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை கைது செய்ய முடியாது என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
பியுமி ஹன்ஸ்மாலியை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று (15) பரிசீலிக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
எனினும், பியுமி ஹன்சமாலி மீதான விசாரணை தடையின்றி தொடரலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபிதா ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகள் முடியும் வரை மனுதாரரை கைது செய்ய மாட்டோம் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.
அதன்படி, மனுவை மேலும் பரிசீலனைக்கு அழைக்கும் திகதி செப்டம்பர் 20ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.