இலங்கை ஜனாதிபதித் தேர்தலை தடுக்கக் கோரிய இரண்டாம் மனுவும் நிராகரிப்பு!
ஜனாதிபதித் தேர்தலை நிறுத்துமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
வழக்கு செலவுக் கட்டணமாக 5 இலட்சம் ரூபாவை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம், சட்டத்தரணி அருண லக்சிரியினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி FR மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அரசியலமைப்பின் 19வது திருத்தம் இன்னும் முறையாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதி தேர்தலை நிறுத்துமாறு சட்டத்தரணி அருண லக்சிறி தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த நிலையில் தேர்தலை நடத்துவது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை மேலும் கோரியுள்ளார்.
இதேவேளை, சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த FR மனுவை நிராகரிக்குமாறு கோரி எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.
எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவினால் இன்று உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.