கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகிய மூத்த வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்திய அணியின் டி20 கேப்டனாக ஹர்டிக் பாண்டியா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலக கோப்பைக்கு முன்பு அவர் தான் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதே சமயம் ஒருநாள் போட்டியில் இன்னும் ரோஹித் சர்மா சிறிது காலம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் இல்லாத சமயத்தில் கேஎல் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வென்றுள்ளதால் அடுத்த சில தொடர்களுக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது.
“டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார். இலங்கைக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பில்லை.
மேலும் ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் அணியை வழிநடத்த உள்ளார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு இரண்டு அணிகளை தயார் செய்ய பிசிசிஐ விரும்புகிறது” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கும் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு துருப்பு சீட்டாக உள்ளார். பல ஆண்டுகளாக டி20 போட்டிகளில் இந்தியாவிற்கு முக்கியமான வீரராக உள்ளார்.
மேலும் இரண்டு ஆண்டுகள் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து தனது கேப்டன்சி திறமையை காட்டியுள்ளார். அவரது தலைமையில் ஒருமுறை கோப்பையையும், ஒருமுறை பைனல் போட்டிக்கும் தகுதி பெற்றது. மறுபுறம் கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகளுக்கு சிறந்த தேர்வாக இருப்பார். கடந்த சில வருடங்களாக மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பையில் விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக விளையாடினார். ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியை நிரப்புவது சற்று கடினமாக இருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் தற்போதுள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களில் இவரும் ஒருவர். எனவே ஒருநாள் போட்டிகளில் இவரை கேப்டனாக்க பிசிசிஐ விரும்புகிறது.
புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் யார்?
புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜி இருவரில் ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. கவுதம் கம்பீர் வினய் குமாரின் பெயரை பரிந்துரைத்தார் என்றும், ஆனால் பிசிசிஐ அதனை விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அபிஷேக் நாயரை உதவி பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யுமாறும் கம்பீர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. வினய் குமாருக்கும் எதிர்ப்பு தெரிவித்த பிசிசிஐ, அபிஷேக் நாயருக்கு செவிசாய்த்துள்ளது. ஜாகீர் கான் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். அதே நேரத்தில் பாலாஜி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.