இந்தியா – சட்டவிரோத உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை; பெண் மருத்துவர் உட்பட எழுவர் கைது
பெண் மருத்துவர் ஒருவர் உட்பட எழுவரை, சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக டெல்லி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
பங்ளாதேஷ், டெல்லியில் சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துவருவதாக டெல்லி காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து இரண்டு மாதகாலமாக அதிகாரிகள் இது தொடர்பாக தகவல் சேகரித்து வருகின்றனர்.இதன் தொடர்பில் பெண் மருத்துவர் உட்பட ஏழு பேரை டெல்லி குற்றப் பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
“சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரம் தொடர்பில் பங்ளாதேஷைச் சேர்ந்தவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார். உடல் உறுப்பு தானம் செய்தவர்களும் தானம் பெற்றவர்களும் அதேபோல் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று டெல்லி காவல் ஆணையர் தெரிவித்தார்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு நபர்கள் கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் ரூ. 25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர், இரண்டு அல்லது மூன்று மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருந்தார்.
உறுப்பு தானம் செய்தவரும் பெற்றவரும் ரத்த சொந்தம் இல்லை எனத் தெரிந்திருந்தும் மருத்துவர் அந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.இதனால், மோசடியில் அவரும் ஈடுபட்டிருக்கிறார் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.