சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 1.11 கோடி பதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல் ; இருவர் கைது
சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு, கடத்த முயன்ற ரூ.1.11 கோடி மதிப்புடைய, அமெரிக்க டாலர், சவுதி ரியால் வெளிநாட்டுப் பணம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
சூட்கேசுகளில் ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த பணத்தை, சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து, கடத்தல் பயணிகள் இரண்டு பேரை கைது செய்து மேலும் விசாரணை.இந்த பணம் ஹவாலா பணம் என்றும், வெளிநாட்டுக்கு பணத்தை கடத்தி சென்று, அங்கிருந்து தங்கக் கட்டிகளாக, சென்னைக்கு கொண்டு வருவதற்கு, இந்த கும்பல் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில், சென்னையைச் சேர்ந்த இரண்டு பயணிகள், சுற்றுலாப் பயணிகள் விசாவில், தாய்லாந்து நாட்டிற்கு செல்வதற்காக வந்தனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு சோதனைகள் நடத்தினர். அந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இரண்டு பயணிகளையும், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் அந்த இரு பயணிகளையும், தற்போது அமுலுக்கு வந்துள்ள பி எஸ் ஏ புதிய சட்ட விதிகளின்படி, பயணிகளின் செல்போன்கள் பதிவுகளை சோதனை நடத்த அதிகாரம் உள்ளதால், அதன்படி இரு பயணிகளின் செல்போன் பதிவுகள் ஆய்வு செய்த போது, இவர்கள் பெருமளவு ஹவாலா பணம்ஃ வெளிநாட்டுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதை அடுத்து அந்த இரு பயணிகளின் சூட்கேஸ்கள், விமானத்தில் ஏற்றுவதற்கு கன்வேயர் பெல்ட் மூலமாக சென்று கொண்டு இருந்ததை, தடுத்து நிறுத்தி, இரு சூட்கேஸ்களையும் திறந்து பார்த்து சோதனை நடத்தினர். சூட்கேசுகளின் ரகசிய அறைகளுக்குள், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், மற்றும் சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு பணங்கள் பெருமளவு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து இரண்டு பயணிகளின் பயணங்களையும் ரத்து செய்த சுங்க அதிகாரிகள், சூட்கேசுகளில் ரகசிய அறைகளில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணக்கட்டுகளை எடுத்து எண்ணிப் பார்த்தபோது, ரூ.1.11 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர், சவுதி ரியால் இருந்தது. இதை அடுத்து வெளிநாட்டு பணக் கட்டுகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், பயணிகள் இருவரையும் கைது செய்து மேலும் விசாரண நடத்தினர்.
அப்போது இந்த இரண்டு பயணிகளும், இந்த ஹவாலா பணத்தை வெளிநாட்டிற்கு கடத்துவது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் கடத்தல் குருவிகள். இந்த ஹவாலா பணத்தை, இவர்களிடம் வேறு யாரோ ஒருவர், கொடுத்து அனுப்பி இருக்கிறார் என்றும் தெரிய வந்தது. இதை அடுத்து இந்த ஹவாலா பணத்தை வெளிநாட்டுக்கு கொடுத்து அனுப்பிய மர்ம அசாமி யார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இதைப்போல் ஹவாலா பணத்தை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று, அங்கிருந்து தங்கக் கட்டிகளாக, இந்தியாவுக்கு கடத்தி வர இவர்கள் திட்டமிட்டுள்ளதும், விசாரணையில் தெரிய வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ.1.11 கோடி மதிப்புடைய ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் பயணிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.