இலங்கை அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: போலீசார் வெளியிட்ட புதிய தகவல்
 
																																		இன்று காலை அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கடுவெல கொரதொட்ட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரிய, ஒருவல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்தா உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், பாடகர் கே.சுஜீவா உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடகர் சுஜீவா மற்றும் மற்றுமொரு ஆண் தற்போது கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், காயமடைந்த இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை அத்துருகிரியவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள டாட்டூ ஸ்டூடியோ திறப்பு விழாவில் கலந்து கொண்ட குழுவினர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்காக டி56 துப்பாக்கிகளுடன் காரில் வந்த இரண்டு ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடக்க விழாவில் அழைக்கப்பட்டவர்களில் கிளப் வசந்தா மற்றும் கே.சுஜீவா ஆகியோர் இருப்பது தெரியவந்தது.
சந்தேக நபர்களை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடுவெல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாகனம் சம்பவம் இடம்பெற்றவுடன் பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் காரை கைவிட்டு அங்கிருந்து வேனில் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
 
        


 
                         
                            
