IMF-மிருந்து கடன் பெற எல்லா நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பூர்த்திசெய்துள்ளது – அமைச்சர் அலி பர்வேய்ஸ் மாலிக்
பாகிஸ்தான், தனது பொருளாதாரத்தை மீட்க அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து ஆறு பில்லியன் டொலருக்கும் அதிகமான கடனுதவி பெறும் நம்பிக்கையுடன் இருக்கிறது.
அதற்கான முதற்கட்ட ஒப்பந்தத்தை அனைத்துலகப் பண நிதிய ஊழியர்களுடன் செய்துகொள்ளும் முயற்சியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடனுதவியைப் பெற அனைத்துலகப் பண நிதியத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் பாகிஸ்தான் கருத்தில்கொண்டு இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தை வரைந்துள்ளதாக அந்நாட்டின் துணை நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான், வருவாய் ஈட்டுவதற்கு சவாலான இலக்குகளை வரவுசெலவுத் திட்டத்தில் வரைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பொருளாதாரம் மறுபடியும் சீர்குலைந்துபோகாமல் பார்த்துக்கொள்ள அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து கடனுதவி பெற வகைசெய்வது அந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
வரி சம்பந்தப்பட்ட புதிய நடவடிக்கைகளின் தொடர்பில் பாகிஸ்தானில் நிலவும் கோபம் அதிகரித்துவரும் வேளையில் அம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
“அனைத்துலகப் பண நிதியத்துடனான இந்நடவடிக்கையை அடுத்த மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் முடித்துவைக்க நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று பாகிஸ்தானின் நிதி, வருவாய், எரிசக்தி துணை அமைச்சர் அலி பர்வேய்ஸ் மாலிக் புதன்கிழமையன்று (ஜூலை 3) சொன்னார்.
இதுகுறித்து அனைத்துலகப் பண நிதியம் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.