இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்… காலுக்குப் பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!!
மகாராஷ்டிராவில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக சிறுவனின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள்.
இதுகுறித்து மருத்துவர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்ட சிறுவனின் பெற்றோர், நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாப்பூரில் ஒன்பது வயதுச் சிறுவன், அண்மையில் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது காலில் பலத்த காயம் அடைந்தான்.
இதையடுத்து, ஜூன் 15ஆம் திகதி ஷாஹாப்பூரின் துணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான் சிறுவன். மருத்துவர் குழுவினர் தவறுதலாக அவனது காலுக்குப் பதிலாகப் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துவிட்டனர்.
அதன்பின்னர், தங்களது தவறை உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக சிறுவனின் காலில் சிகிச்சை மேற்கொண்டது.
“சிறுவனின் காலில் காயம் இருந்ததுடன், அவனுக்கு ‘ஃபிமோசிஸ்’ பிரச்சினையும் இருந்தது. அதாவது, பிறப்புறுப்பின் தோல் இறுக்கமாக இருந்ததால், சிறுவனுக்கு இருவித அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
“இந்த ‘ஃபிமோசிஸ்’ சிகிச்சை குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்த மருத்துவர்கள் மறந்திருக்கலாம்,” என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இருப்பினும், மருத்துவமனையின் கவனக்குறைவினால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.