ஆட்சி வேட்கையில் ஜெர்மன் வலதுசாரி கட்சி; ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு
ஜெர்மனியை ஆட்சி செய்வதே தனது இலக்கு என வலதுசாரி கட்சியான ‘ஆல்டர்னேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ (ஏஎஃப்டி) தெரிவித்துள்ளது.
“முதலில் ஜெர்மனியின் கிழக்குப் பகுதியை ஆட்சி செய்ய விரும்புகிறோம். அதையடுத்து, நாட்டின் மேற்குப் பகுதியையும் எங்கள் வசம் கொண்டு வர இலக்கு கொண்டுள்ளோம். கடைசியாக, ஒட்டுமொத்த ஜெர்மனியின் அரசாங்கமாக ஆட்சி பீடத்தில் அமர விழைகிறோம்,” என்று ஏஎஃப்டி கட்சியின் இணைத் தலைவர் திரு டினோ சுருபல்லா கூறினார்.
இந்நிலையில், ஜூன் 29ஆம் திகதியன்று அரசியல் மாநாடு ஒன்றை ஜெர்மனியின் எஸ்ஸென் நகரில் அக்கட்சி நடத்தியது.அப்போது அக்கட்சியை எதிர்த்து மாநாடு நடைபெற்ற இடத்தை நோக்கி ஏறத்தாழ 50,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.
பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஏறத்தாழ 1,000 காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது.இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அடையாளம் தெரியாத சிலர் அந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்தது.அந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கீழே விழுந்த பிறகும் தாக்குதல் தொடர்ந்ததாக அறியப்படுகிறது.
இன்னோர் இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில் ஏழு காவல்துறை அதிகாரிகளுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏஎஃப்டி கட்சி 2013ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் அது 16 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.