சூடுபிடிக்கும் ஈரானின் அதிபர் தேர்தல்: வாக்களிப்பு நேரம் நீட்டிப்பு
ஈரான் அதிபர் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச தலைவர் அழைப்பு விடுத்ததை அடுத்து வாக்களிப்பு நேரத்தை நீட்டித்துள்ளது
ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து ஈரானியர்கள் வெள்ளிக்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
ஈரான் அதிபர் பதவிக்கான இறுதி வேட்பாளர் பட்டியலில் முகமது பாகர் கலிபாப், சயீத் ஜலிலி, மசூத் பெஜெஷ்கியான், முஸ்தபா பூர்மொஹம்மதி, அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி ஆகியோர் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி ஆகியோர் போட்டியில் இருந்து விலகினர். இதனால் 4 பேருக்கிடையே போட்டி நிலவுகிறது.
இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல நகரங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குள் வரிசைகளை அரசு தொலைக்காட்சி காட்டியது. “மக்கள் இன்னும் வாக்களிக்கக் காத்திருப்பதால்” 1630 GMT வரை இரண்டு மணிநேரத்திற்கு வாக்கெடுப்புகள் நீட்டிக்கப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு பெரும்பாலும் நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது. சனிக்கிழமை முடிவு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்த வேட்பாளரும் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளை பெறவில்லை என்றால், அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய முதல் வெள்ளிக்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தவண்ணம் உள்ளது. இந்த முறை மக்கள் அதிக அளவில் ஓட்டு போட வேண்டும் என தலைவர் அயதுல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.