கட்டுப்படியான விலையில் வீடுகள் ; 85 மில்லியன் டொலர் வழங்கும் பைடன் அரசாங்கம்
அமெரிக்காவில் கட்டுப்படியான விலையில் வழங்கப்படும் வீடுகளைக் கட்டவும் அத்தகைய வீடுகளைப் பாதுகாக்கவும் இடையூறுகளை அகற்ற உதவவும் அதிபர் ஜோ பைடனின் அரசாங்கம் 85 மில்லியன் டொலர் நிதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
அத்தொகை 21 மாநில, உள்ளூர் அரசாங்கங்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிதியுதவி, மாநில, உள்ளூர் வீடமைப்புத் திட்டங்களைப் புதுப்பிப்பது, நிலப் பயன்பாட்டு சட்டங்களை மாற்றியமைப்பது போன்றவற்றுக்குக் கைகொடுக்கும் என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ், வீடமைப்பு, நகர்ப்புற மேம்பாட்டுத் தற்காலிக அமைச்சர் ஏட்ரியன் டொட்மன் இருவரும் குறிப்பிட்டனர்.
அமெரிக்காவில் நிலவும் பெரிய அளவிலான வீட்டுப் பற்றாக்குறை, வாடகைக் கட்டணங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரிக்கக் காரணமாக இருந்து வருகிறது. அதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது சமூகம் சார்ந்த முதலீடுகளின் மூலம் ஈட்டப்பட்ட வருவாயில் 100 மில்லியன் டொலர் தொகை, கட்டுப்படியான விலையில் உள்ள வீடுகளுக்கான புதிய நிதிக்கு மாற்றிவிடப்படும் என்று செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 25) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேனட் யெலன் தெரிவித்தார். லாஸ் ஏஞ்சலிஸ், ஹவாயி உள்ளிட்ட பகுதிகளுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும்.