இலங்கை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டம் நாளையும் தொடரும்! வெளியான அறிவிப்பு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) அறிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்,
அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து வியாழன் (ஜூன் 27) அன்று பணிக்கு வருவதைத் தவிர்ப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று CTU தொழிற்சங்க உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து கடமையிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதே சமயம், CTU தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள், கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு லோட்டஸ் வீதி வரை ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.