பொருளாதார பேச்சுவார்த்தை: வியட்னாம் அமைச்சரை வரவேற்ற அமெரிக்கா
பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்து தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வியட்னாமின் திட்ட, முதலீட்டு அமைச்சர் கையன் சீ டுங்கை அமெரிக்கா, செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 25) வரவேற்றது.
இருநாட்டு உறவு என்றையும்விட வலுவாக இருப்பதாகவும் அமெரிக்கா கூறியது.
அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வியட்னாமுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்தார். வியட்னாம், புட்டினை வரவேற்றது அமெரிக்காவை ஆத்திரப்படுத்தியது.
அதற்கு சில நாள்களுக்குப் பிறகு அமெரிக்கா, வியட்னாமிய அமைச்சரைப் பேச்சுவார்த்தைக்காக வரவேற்றுள்ளது. 2023ஆம் அண்டில் வாஷிங்டன், அமெரிக்கா-வியட்னாம் தொடர்பை முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவமாக மாற்றியது.
சென்ற வாரம் புட்டின், வியட்னாமுக்குப் பயணம் மேற்கொண்டதை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. அதனையடுத்து, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பகை நிலவும் வேளையில் ஹனோயுடன் தொடர்பை மேம்படுத்திக்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்போவதாக வாஷிங்டன் குறிப்பிட்டது.
“வியட்னாமுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு என்றும் இருந்து வந்துள்ளதைப் போல் வலுவாக இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அமெரிக்காவின் பொருளியல் வளர்ச்சி, எரிசக்தி, சுற்றுச்சூழல் உதவிச் செயலாளர் ஜோசே ஃபெர்னாண்டஸ் கூறினார்.