மஹிந்த சிந்தனைக்கு உடன்படும் வேட்பாளருக்கு மொட்டுக் கட்சியின் ஆதரவு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்படும் அல்லது ஆதரிக்கப்படும் வேட்பாளர் ‘மஹிந்த சிந்தனையுடன்’ உடன்பட்டு அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நடக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்றின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் வேட்பாளராக இருக்கக் கூடாது என இன்று ஒன்று கூடிய அனைவரும் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கூறுகையில்,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ‘மஹிந்த சிந்தனையுடன்’ இணங்கும் நபராகவே இருக்க வேண்டும் என்ற கருத்தையே கூடியிருந்தவர்களில் பெரும்பாலோர் கொண்டிருந்தனர்.
செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் அங்கீகரிக்கப்பட்டதாகவும், வேட்பாளர் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.