சீனா மீதான ஐரோப்பிய ஒன்றிய வரிகள் ஒரு ‘தண்டனை’ அல்ல ; ஜேர்மன் பொருளாதார அமைச்சர்
சீனப் பொருள்கள் மீது பரிந்துரைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய வரி விதிப்பு தண்டனையன்று என ஜெர்மனியின் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹபெக் கூறியுள்ளார்.சீனப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் ஜூன் 22ஆம் திகதி பெய்ஜிங்கில் சீன அதிகாரிகளிடம் அவ்வாறு கூறினார்.
சீனாவில் தயாரிக்கப்படும் மின்வாகனங்களுக்கு அதிக அளவிலான வரி விதிக்க பிரஸ்சல்ஸ் பரிந்துரைத்த பிறகு, ஐரோப்பிய உயரதிகாரி ஒருவர் சீனா செல்வது இதுவே முதல்முறை.
இந்த வரி விதிப்பை, கூடுதலாக வழங்கப்பட்ட மானியங்களுக்கு ஈடுகட்டும் முயற்சியாக ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.மின்வாகனங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உரசல்கள் அதிகரிப்பது வர்த்தகப் போரைத் தூண்டக்கூடும் என்று அமைச்சர் ஹபெக்கின் வருகைக்கு முன்பாக ஜூன் 21ஆம் திகதி, சீனா எச்சரித்தது.
பருவநிலை, உருமாற்றம் தொடர்பான முதல் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ஹபெக், “இந்த வரிகள் தண்டிக்கும் நோக்கில் விதிக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்,” என்று கூறினார்.
அமெரிக்கா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் தண்டிக்கும் விதமான வரிகளை விதித்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அவ்வாறு விதிக்கவில்லை என்று கூறிய அவர் ஐரோப்பாவின் நடவடிக்கைகள் மாறுபட்டவை என்றார்.மானியங்களால் சீன நிறுவனங்கள் நியாயமற்ற வகையில் பலனடைந்தனவா என்று ஒன்பது மாதங்களுக்கு ஒன்றியம் விரிவாக ஆராய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
சீனாவுடனான வர்த்தகத்தில் நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றுவதே இந்த வரிகளின் நோக்கம் என்று சீனாவின் தேசிய வளர்ச்சி, சீர்திருத்தக் குழுத் தலைவர் செங் ஷஞ்சியிடம் அவர் கூறினார்.அதற்குப் பதிலளித்த செங் சீன நிறுவனங்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பெய்ஜிங் மேற்கொள்ளும் என்றார்.