ஃபிரில் கொம்புகள் கொண்ட இராட்சஜ டைனோசர் கண்டுப்பிடிப்பு : ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்!
வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களில் இதுவரை கண்டிராத “மிகப் பெரிய ஃபிரில் கொம்புகள்” கொண்ட புதிய ராட்சத டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காண்டாமிருகத்தின் கட்டமைப்பை ஒத்த, லோகிசெராடாப்ஸ் ரங்கிஃபார்மிஸின் புதைபடிவங்கள் அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஏறக்குறைய 78 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த டைனோசர், அதன் மீது குறைந்தது 20 கொம்புகளுடன் தனித்துவமாக அலங்கரிக்கப்பட்ட ஃபிரில் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சுமார் ஐந்தரை டன் எடையுள்ள இந்த டைனோசர், கொம்புகளை ஆயுதங்கள் போல் பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு கொம்பும் சுமார் இரண்டடி அளவுகளை கொண்டதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் அதற்கு நார்ஸ் கடவுளான லோகியின் நினைவாக லோகிசெராடாப்ஸ் பெயரிடப்பட்டது.
145 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்திருந்த கிரெட்டேசியஸ் காலத்தில் மேற்கு வட அமெரிக்காவில் சுற்றித் திரிந்த செராடோப்சியன்கள் எனப்படும் கொம்புகள் கொண்ட டைனோசர்களின் பல வகைகளில் லோகிசெராடாப்ஸ் ஒன்றாகும்.