ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் சேதமடைந்த உக்ரைன் எரிசக்திக் கட்டமைப்பு
ரஷ்யா நடத்திய வானூர்தி, ஏவுகணைத் தாக்குதல்களில் வியாழக்கிழமையன்று (ஜூன் 20) உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பு சேதமடைந்ததாக உக்ரேனிய எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓர் எரிசக்தி நிலையத்தில் ஊழியர்கள் மூவர் காயமுற்றதாகவும் பயனீட்டாளர்கள் சிலர் மின்தடையை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. உக்ரேன் எரிசக்தி நிறுவனமான டிடிஇகே, தனது வெப்பநிலை ஆலைகளில் ஒன்று பெரும் சேதத்துக்கு உள்ளானதாகக் கூறியது.
தற்போதைய இளவேனிற்காலத்தில் ரஷ்யா, உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பைக் குறிவைத்து வானூர்தி, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது; அதனைத் தொடர்ந்து உக்ரேனின் எரிசக்தி உற்பத்தி ஆற்றல் பாதியாகிவிட்டதாகவும் பல இடங்களில் மாறி மாறி மின்தடை ஏற்படும் நிலை எழுந்துள்ளதாகவும் கியவ் குறிப்பிட்டது.
வியாழக்கிழமையன்று ரஷ்யா ஏவிய ஒன்பது ஏவுகணைகளில் ஐந்தையும் 27 வானூர்திகள் அனைத்தையும் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய விமானப் படை தெரிவித்துள்ளது. ரஷ்யா பெரும்பாலும் கிழக்கு உக்ரேனைக் குறிவைத்ததாகவும் அதிலும் குறிப்பாக ட்னிப்புரொப்பெட்ரொவ்ஸ்க் வட்டரத்தில் கவனம் செலுத்தியதாகவும் உக்ரேனிய ராணுவம் விவரித்தது.
ட்னிப்புரொப்பெட்ரொவ்ஸ்க் வட்டாரத்தின்மீது காணப்பட்ட ஐந்து வானூர்திகளையும் நான்கு ஏவுகணைகளையும் உக்ரேனிய விமானம் படை சுட்டு வீழ்த்தியதாக அவ்வட்டார ஆளுநர் கூறினார். தாக்குதலில் மூவர் காயமடைந்ததாகவும் ஏழு வீடுகள் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வான்வழி உக்ரேன் தலைநகர் கியவ்வை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எல்லா ஆயுதங்களையும் உக்ரேனின் விமானப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹெய் பொப்கோ தெரிவித்தார். கியவ்வில் யாரும் காயமடைந்ததாகவோ நகரில் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் ஏதும் இல்லை.
எரிசக்திக் கட்டமைப்பு, தாக்குதல் நடத்த ராணுவம் குறிவைக்கக்கூடிய ஒன்றுதான் என்பது ரஷ்யாவின் வாதம். அதோடு, பொதுமக்களையோ அவர்கள் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பையோ குறிவைத்ததை ரஷ்யா மறுக்கிறது.