இந்தியா- அமேசான் பார்சலில் வந்த கொடிய விஷ பாம்பு… அதிர்ச்சியில் உறைந்த தம்பதியர்!
பெங்களூருவைச் சேர்ந்த தம்பதிகள், அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் எக்ஸ் பாக்ஸ் எனப்படும் விளையாட்டு சாதனம் ஒன்றை ஆர்டர் செய்திருந்தனர். நேற்று மாலை அவர்களுக்கு இந்த பேக்கேஜ் டெலிவரி செய்யப்பட்டிருந்தது. டெலிவரிக்காக வந்திருந்த நபர் பெட்டியை அந்த தம்பதிகளிடம் வழங்கிய போது, பெட்டியில் இருந்து பாம்பு போன்ற ஒன்று நெளிவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை உடனடியாக ஓரமாக வைத்துவிட்டு சற்று நேரம் பார்த்தபோது பெட்டிக்குள் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பாம்பு, பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் சிக்கி நகர முடியாமல் தவித்துள்ளது. உடனடியாக இது தொடர்பாக அமேசான் நிறுவனத்திற்கு அவர்கள் தொடர்பு கொண்ட போது, உரிய பதிலளிக்காமல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அவர்களை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பாம்பு பிடிக்கும் வீரர் வரவழைக்கப்பட்டு, அந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக அமேசான் நிறுவனத்தில் அளித்த புகாரின் பேரில் மொத்த பணத்தையும் திரும்பத் தருவதாக அமேசான் நிறுவனம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவும், அல்லது அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அமேசான் நிறுவனம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த தம்பதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.