இலங்கை பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்: கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் பல சீர்திருத்தங்களை அறிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் 4 மற்றும் 5 ஆம் தரங்களில் உள்ள வகுப்பறை வேலைகளில் இருந்து பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் பிள்ளைகளின் கல்வி மதிப்பீடுகளை தற்போதைய நிலையில் தொடர முடியாது என பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குறைந்தது 30% பரீட்சை மதிப்பெண்களை இரண்டு வருடங்களில் பெற்றிருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்களால் நடத்தப்படும் தேவையான மதிப்பீடுகள் மூலம் பெறப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாத்தாண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் இந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் நாட்டிலுள்ள அனைத்து முன்னணி பாடசாலைகளுக்கும் 2,500 (smart boards) ஸ்மார்ட் பலகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரேமஜயந்த தெரிவித்தார்.