இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் செய்த மோசமான செயல்
இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்துள்ளனர்.
ஹொரணை, பெல்லாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், கதிர்காமம், கோதமிகம பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரிடமிருந்து தொழில் பெற்று தருவதாக கூறி 1,689,000 ரூபா பணம் பெற்றுள்ளார்.
எனினும் அதற்குரிய தொழில் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, குறித்த பெண்ணை பணியகத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், குறித்த சந்தேக நபர் பணியக சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டின் ஊடாகவே இலங்கையர்களுக்கு இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
அதற்கமைய, அந்த விடயத்தில் வேறு நபர்கள் எவரும் தலையிட முடியாது எனவும், வேலை வழங்க முடியும் எனக் கூறும் நபர்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.