இந்தியாவில் 2வது பறவைக் காய்ச்சல் சம்பவம்; மேற்கு வங்காளத்தில் 4 வயது குழந்தைக்கு பாதிப்பு
மேற்கு வங்காள மாநிலத்தில் நான்கு வயது குழந்தைக்கு ஹெச்9என்2 கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் இரண்டாவது முறையாக அறிவிப்பு செய்துள்ளது.
இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு அந்நிறுவனம் இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டதாகக் கூறியது.தற்போது பாதிக்கப்பட்ட குழந்தை குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தீவிர சிகிச்சைச் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு சுவாசக் கோளாறு, மிதமிஞ்சிய காய்ச்சல் மற்றும் வயிற்றுக் கோளாறு பிரச்சினைகள் இருந்தன.மூன்று மாதங்களுக்குப் பிறகுஉடல்நலம் தேறியுள்ள குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வீட்டுக்கு அருகில் உள்ள பண்ணைகளில் இருந்து இந்த ஹெச்9என்2 கிருமித் தொற்றுக்கு குழந்தை ஆளாகியிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழந்தையுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கோ சிகிச்சை அளித்த மருத்துவப் பணியாளர்களுக்கோ எந்தத் தொற்றும் ஏற்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஆங்காங்கே உருவாகி வரும் தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.