அமெரிக்காவில் மகள் தொலைத்த டெடி பியரை தேடும் தந்தை; அனைவரையிம் நெகிழ வைத்த காரணம்!
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி வருகிறார்.
ஊரையே அலசி அந்த பொம்மையை ஏன் தேடி வருகிறார் என அவர் பகிர்ந்த காரணம் கேட்பவர்களை மனம் நெகிழ செய்துள்ளது எப்படியாவது அதனை மகளுக்கு கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என தன்னால் இயன்ற வரை தேடி வருகிறார்.
அமெரிக்காவின் டெனெஸ்ஸி பகுதியை சேர்ந்தவர் டைலர் கென்னடி. இவருக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். சில காலம் முன்னர் கென்னடியின் மனைவி இறந்துவிட்டார்.
இதனால், அந்த குழந்தையின் பாட்டி, கென்னடியின் மனைவியுடைய இதயத்துடிப்பு அடங்கிய டெடி பியர் பொம்மை ஒன்றினை பேத்திக்கு வழங்கினார். பொம்மையின் கையை அழுத்தினால், தாயின் இதயத்துடிப்பு சத்தம் கேட்கும் வகையில் அந்த பொம்மை செய்யப்பட்டிருந்தது.
வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பொருட்களை உள்ளூர் ஸ்டோர் ஒன்றிற்கு தானமாக வழங்கும்போது தவறுதலாக இந்த டெடி பியர் பொம்மையும் சென்றுவிட்டது. இதனை அறிந்த குழந்தையின் தந்தை கென்னடி, நடந்தவற்றை கூறி பொம்மை யாரிடமாவது இருந்தால் திருப்பித் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது தாயின் ஞாபகமாக மகளிடம் இருக்கும் ஒரு பொருள் அந்த பொம்மை என்றும், இதனை தயவு செய்து கண்டுபிடித்து திருப்பித் தரவேண்டும் எனவும் அந்த ஸ்டோர் உரிமையாளருக்கும், அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் கென்னடி செய்தி அனுப்பியிருக்கிறார்.
இதற்கான பணத்தையும் அவர் தந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். கடையின் உரிமையாளர், நிச்சயம் அந்த பொம்மை சுற்றுவட்டாரத்தில் யாரிடமாவது தான் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும் பொம்மையை பற்றிய தகவல்கள் அடங்கிய போஸ்டர்களையும் அச்சடித்து, கென்னடியின் முகவரியுடன் அங்கங்கு ஓடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகளின் தொலைந்துபோன பொம்மையை கண்டுபிடிக்க தந்தை எடுத்துவரும் முயற்சிகளும், அதன் பின்னால் இருக்கும் காரணமும் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!