உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை தேவையில்லை – ஹர்ஷ சில்வா
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்து அது தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு தெரிவித்ததை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நன்றி தெரிவிக்கும் வேளையில், நாடாளுமன்ற சிறப்புரிமையுடன் தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்போது சபாநாயகர் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா என கேட்டதாகவும், அவ்வாறான அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு அவ்வாறான விசாரணை தேவையில்லை எனவும் தேவைப்பட்டால் மீண்டும் அறிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகிறது.
இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.