தைவானுக்கு 80 மில்லியன் பெறுமதியான F-16 விமானங்களின் பாகங்களை விற்க அமெரிக்கா அனுமதி
தைவானுக்கு எஃப்16 போர் விமானங்களின் கூடுதல் உதிரி பாகங்களையும் பழுதுபார்க்கும் பாகங்களையும் விற்க அமெரிக்க வெளியுறவு அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன் மதிப்பு 80 மில்லியன் US டொலராகும் (S$108 மில்லியன்). பென்டகனின் தற்காப்பு ஒத்துழைப்பு முகவை இதனை ஜூன் 5ஆம் திகதி தெரிவித்தது.
இந்த விற்பனை, உதவி பெறும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தவும் ராணுவ சமநிலைக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் வட்டார பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும் என்று டிஎஸ்சிஏ எனும் பென்டகன் தற்காப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முகவை அறிக்கையில் தெரிவித்தது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சு அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எஃப்16 போர் விமானங்களின் உதிரிபாகங்களை தமக்கு விற்பதால் தமது நாட்டின் விமானப் படையின் ஆற்றல் மேம்படும் என்று அது கூறியுள்ளது.
“சீன கம்யூனிஸ்ட் கட்சி எங்களுடைய கடற்படை, விமானப் படை பயிற்சிக்கான இடங்களை நெருக்கடியில் வைத்தது. எங்களுடைய தற்காப்புக்கான உரிமையை கட்டுப்படுத்தியது,” என்று தைவான் மேலும் கூறியது.
தைவானின் முக்கிய ஆயுத விற்பனை நாடான அமெரிக்கா, தைவானுக்கு ஆயுதங்களை விற்கக்கூடாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தைவான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும் அந்நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.