இந்திய மக்களவைத் தேர்தல்: குடியரசுத் தலைவரிடம் ராஜிநாமா கடிதத்தை கையளித்த மோடி!
பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவையை கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் பிரதமர் நரேந்திர மோடி கையளித்துள்ளார்.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார். மத்திய அமைச்சர்கள் குழுவுடன் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
குடியரசுத் தலைவர் மோடியின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதுடன், புதிய அரசு அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு பிரதமரையும் மத்திய அமைச்சர்கள் குழுவையும் கேட்டுக் கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையிலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியுள்ளது.
தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது.
தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையிலும், கூட்டணிக் கட்சிகளுடன் கைகோத்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலையில் உள்ளது பாஜக
2019 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாஜகவின் வெற்றி எண்ணிக்கை அதன் முந்தைய நிகழ்ச்சிகளை விட குறைவாக இருந்தபோதிலும், காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியது, 2019 இல் 52 மற்றும் 2014 இல் 44 உடன் ஒப்பிடும்போது 99 இடங்களை வென்றது.
பிரதமா் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தொடா்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை பிரதமா் மோடி சமன் செய்யவிருக்கிறார்.
ஜூன் 8 ஆம் தேதி பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.