இந்திய மக்களவை தேர்தல் – 3வது இடத்திற்கு முன்னேறிய சீமானின் நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேறி 8.9 வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் காங்கிரஸ் திமுக சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்திய கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . இந்திய கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து 40 தொகுதிகளிலும் களம் கண்டது. 2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.9 சதவீதம் வாக்குகளை பெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில் 6.89 சதவீத வாக்குகளை பெற்றது.
இந்த முறை தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர் கட்சி மேலும் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னேறியது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ள நாம் தமிழர் கட்சி 2024 மக்களவை தேர்தலில் 8.19 வீத வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுகிறது.
அதேபோல 2 மக்களவைத் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியது.