பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்து குறித்து எச்சரிக்கை
ரொட்டி, வெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட சில உணவுகளை தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் பிரிவில் சேர்த்துள்ளது. அவை ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்களில், குரூப் சி உணவுப் பொருட்களில் ரொட்டி, தானியங்கள், கேக், சிப்ஸ், பிஸ்கட், பிரென்ச் பிரைஸ், ஜாம், சாஸ், மயோனைஸ், ஐஸ்கிரீம், புரோட்டீன் பேக் பவுடர், வேர்க்கடலை வெண்ணெய், சோயா சங்க்ஸ், டோஃபு போன்ற தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீஸ், வெண்ணெய், இறைச்சி, ரெடி டு ஈட் தானியங்கள், பதப்படுத்தப்பட்ட மாவு வகைகள், எனர்ஜி பானங்கள், பால், குளிர் பானங்கள் மற்றும் ஜூஸ்கள் போன்றவற்றையும் குரூப் சி பிரிவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சேர்த்துள்ளது.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றால் என்ன?
அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவு ஏன் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான காரணங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். பலவித தானியங்கள் அதிக தீயில் வறுக்கப்பட்டு அரைக்கப்பட்டு, பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க, அதில் செயற்கை பொருட்கள் மற்றும் சேர்க்கைகள் சேர்க்கப்படுகின்றன. அதேபோல, பழங்கள் கெட்டுப் போகாதபடி பல நாட்கள் உறைந்த நிலையில் வைக்கப்படுகின்றன. பாலும் பேஸ்டுரைஸ் செய்யப்படுகிறது. இந்த ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கு தயார் செய்யும் அனைத்து செயலாக்கங்களும் உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து விடுகின்றன. அதேசமயம், உற்பத்தியின் சுவை, நிறம் மற்றும் ஆயுளை நீட்டிக்க, செயற்கை இனிப்புகள், வண்ணங்கள், சேர்க்கைகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கின்றன.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் நோய்கள்
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை அதிக அளவிற்கு உட்கொள்வதும், வழக்கமாக உட்கொள்வதும் உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை ஏற்படுத்தும். இந்த தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் (UPF) கொழுப்பு அதிகம் என்பதோடு, நார்ச்சத்து உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும். எனவே பதப்படுத்தப்பட்ட உணவு, உடல் பருமன், அதிகரித்த முதுமை மற்றும் மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு மற்றும் மோசமான ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பெரிய பிரச்சனை என்னவென்றால், அத்தகைய உணவுகள் மிக எளிதில் கிடைக்கின்றன, அவை பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த தேர்வாகவும் அமைகின்றன. ஐசிஎம்ஆர், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறது, அதாவது இந்த உணவுகளில் சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ளதாலும், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளதாலும், ஆரோக்கியமான உணவுக்கான தேர்வாக இருக்காது என குறிப்பிட்டுள்ளது.