இந்திய மக்களவைத் தேர்தல் : பாஜக 290, காங்கிரஸ் 235 தொகுதிகளில் முன்னிலை
2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜகவை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்குர், பிரஹலாத் ஜோஷி, ஜோதிராதித்யா சிந்தியா, கிஷன் ரெட்டி மற்றும் கங்கனா ரணாவத், பசவராஜ் பொம்மை, சுரேஷ் கோபி, மஜத குமாரசாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், சசி தரூர், சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதற்கிடையே, பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை மந்தமாக இருப்பதாகவும், முடிவுகள் வெளியிடுவதில் தாமதப்படுத்துவதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல்லில் மார்க்சிய கம்யூனிஸ்ட்டும், தருமபுரியில் திமுகவும் வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.