யானைகளும் கலக்கமடைந்துள்ளன
ஒரே இடத்தில் இருந்து அதிகளவான யானைகளை காணக்கூடிய உலகின் தனித்துவமான பூங்காவாக விளங்கும் மின்னேரிய தேசிய பூங்காவில் தற்போது யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சுற்றாடல் தணிக்கை பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் ஆக்கிரமிப்பு செடிகள் பரவியதால், பூங்காவில் உள்ள புல்வெளிகளின் பரப்பளவு குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என்றும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் காரணமாக மின்னேரிய தேசிய பூங்காவில் வருடாந்தம் யானை கூட்டம் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மொரகஹகந்த திட்டத்தினால் மின்னேரிய தேசிய பூங்காவிற்கு யானைகள் வருகை குறைந்துள்ளதாகவும் முன்னாள் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான யானைகள் செப்டம்பர் மாதத்தில் இந்த பூங்காவிற்கு வருகை தருகின்றன. ஆய்வின்படி, 2017ம் ஆண்டை விட, 2021ல் யானைகளின் வருகை 95 சதவீதம் குறைந்துள்ளது.
மின்னேரியா தேசிய பூங்காவில் 1160 ஹெக்டேர் புல்வெளிகள் உள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செடிகள் புல்வெளி முழுவதும் பரவியுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கை கூறுகிறது.
இது புல் உண்ணும் விலங்குகளின் இருப்புக்கும், பூங்காவின் இருப்புக்கும் இடையூறாக இருக்கும் என்றும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.